

சென்னை: தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரிமா.சாந்தி அறிவுரையின் பேரில்,சென்னை முதலாம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அ.ஜெயலட்சுமி தலைமையில்தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களால் கடந்த 12-ம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சென்னை காசிசெட்டி தெருவில் விற்பனைக்காகவைக்கப்பட்டிருந்த, விவரங்கள் குறிப்பிடப்படாத இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, உதவி ஆணையர் அ.ஜெயலட்சுமி கூறியதாவது: பொட்டலப் பொருளில் தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர் பெயர், முழு முகவரி, இறக்குமதி பொருளாக இருந்தால் தயாரிக்கப்பட்ட நாட்டின் பெயர், நிகர எடை, எண்ணிக்கை, இறக்குமதி செய்யப்பட்ட மாதம், ஆண்டு, உள்ளூர் வரிகள் உட்பட அதிகபட்ச சில்லறைவிற்பனை விலை உள்ளிட்டவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்படாத பொட்டல பொருட்களைத் தயாரிக்கவோ, பொட்டலமிடவோ, விற்கவோ, இறக்குமதி செய்யவோ, விநியோகிக்கவோ கூடாது என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை மீறுவோருக்கு சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இவ் வாறு அவர் தெரிவித்தார்.