Last Updated : 08 May, 2016 01:31 PM

 

Published : 08 May 2016 01:31 PM
Last Updated : 08 May 2016 01:31 PM

மும்முனைப் போட்டியில் சங்கரன்கோவில் தொகுதி யாருக்கு சாதகம்?

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 3 கட்சிகளுமே முழுவீச்சில் களப்பணியில் ஈடுபட்டிருக்கின்றன.

சங்கரன்கோவில் நகராட்சி, சங்கரன்கோவில் தாலுகாவில் ஒரு பகுதி மற்றும் 73 ஊராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சியை உள்ளடக்கியது இத் தொகுதி. திருநெல்வேலி மாவட்டத்தின் நெசவாளர்கள் அதிகமுள்ள பகுதி சங்கரன்கோவில். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இத் தொகுதியில் கணிசமாக வசிக்கின்றனர். அடுத்ததாக தேவர், யாதவர், நாயக்கர், முதலியார் என்று பல்வேறு சமுதாயத்தினர் இருக்கிறார்கள்.

1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் 7 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸும் வெற்றி பெற்றிருக்கின்றன. 2006, 2011 தேர்தல்களில் அதிமுக வேட்பாளர் சி. கருப்பசாமி வெற்றி பெற்றார். அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை அடுத்து 2012-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், அதிமுக வேட்பாளர் எஸ். முத்துச்செல்வி வெற்றி பெற்றார்.

தற்போது இத் தொகுதியில் 15 பேர் களத்தில் உள்ளனர். சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்த மு. ராஜலட்சுமி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். திமுக சார்பில் க. அன்புமணி, மதிமுக சார்பில் டாக்டர் சதன்திருமலை குமார் போட்டி யிடுகிறார்கள். இப்போதைய நிலவரப்படி இந்த 3 பேருக்கும் இடையேதான் பிரதானப் போட்டி உள்ளது.

அதிமுக கோட்டை

இத் தொகுதியில் கடந்த 1980, 1984, 1991, 1996, 2001, 2006, 2011 தேர்தல்களிலும், 2012 இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றிபெற்றுள்ளனர்.

எனவே, இத்தொகுதியை அதிமுக கோட்டை என்று கருதும் அக் கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகின்றனர்.

தேவர், முதலியார் சமுதாய வாக்குகளும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து பிரியும் வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் என்று அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள்.

நம்பிக்கையுடன் திமுக

திமுக தரப்பில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் அதிகப்படியான வாக்குகளை நம்பியிருக்கிறார்கள். ஆளுங்கட்சி மீதான மக்களின் அதிருப்தி ஒட்டுமொத்தமாக தங்களுக்கு சாதகமாக திரும்பும் என்பது அவர்களது கணக்கு.

அதிமுகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் தேவர் சமுதாய வாக்குகளை பிரிக்கும் வகையில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் க. முருகன், நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு வேட்பாளரான சிவசேனா வேட்பாளர் பொ. சுப்புலட்சுமி ஆகியோர் களத்தில் போட்டியிடுவது, திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது.

அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய வாக்குகளை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செ. சுபாஷினி உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் பிரிக்கும் வாய்ப்புள்ளது.

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிமுகவும், திமுகவும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன. இதனால் அவர்களது வாக்குகள் எந்த பக்கம் செல்லும் என்பதை கணிக்க முடியாத நிலையுள்ளது.

முந்தும் மதிமுக.

மதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சதன்திருமலைக்குமாருக்கு இத் தொகுதியிலுள்ள நாயக்கர் சமுதாய வாக்குகள் மொத்தமாக கிடைக்கும் என அக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். இதுபோல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினர் வாக்குகளும் கிடைக்கும் வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இத் தொகுதிக்குள்தான் வருகிறது. எனவே இத் தொகுதியில் இம்முறை வெற்றி பெறவேண்டும் என்று அக் கட்சியினர் பம்பரமாக சுழன்று வருகிறார்கள். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக வாக்குகளும் மதிமுகவுக்கு கிடைக்கும்.

கடந்த 2012 இடைத்தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்ட சதன்திருமலைக்குமார் 20 ஆயிரம் வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் 10 ஆயிரம் வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்த வாக்குகள் அனைத்தும் தற்போது சதன்திருமலைக்குமாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அக் கட்சியினரிடையே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x