

பெண்ணை மனு கொடுத்த பேப்பரால் தட்டிய சம்பவத்தைக் கண்டித்து விருதுநகரில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் வீட்டை முற்றுகை யிட முயன்ற பாஜகவினர் 220 பேரை போலீஸார் கைது செய் தனர்.
விருதுநகர் அருகே பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலாவதி. இவர் 77 வயதான தனது தாய் சகுந்தலாவுக்கு முதியோர் உதவித் தொகை கேட்டு கடந்த சனிக்கிழமை கிராமத்துக்கு வந்திருந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மனுக் கொடுத்தார்.
கலாவதி கொடுத்த மனுவை வாங்கிய அமைச்சர், அதைக்கொண்டு அவரது தலையில் தட்டினார். மனுக் கொடுக்க வந்த பெண்ணை அமைச்சர் அடித்ததாக சமூக வலைதளங்களில் வைரலானது.
மனுக்கொடுத்த பெண்ணைத் தாக்கிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும், இல்லையேல் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக விருதுநரில் நேற்று முன்தினம் பேட்டியளித்த கலாவதி, அமைச்சர் தன்னைத் தாக்கவில்லை என்றும், எப்போதும்போல தனது தலையில் தட்டியதாகவும் கூறினார்.
இந்நிலையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பதவி விலகக் கோரி விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட பாஜகவினர் மதுரை சாலையில் திரண்டனர். முன்னதாக அமைச்சரின் வீட்டைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளிலும் போலீஸார் தடுப்புகள் அமைத்திருந்தனர். அமைச்சர் வீட்டின் முன் திமுகவினரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சரின் வீட்டை முற்றுகையிட புறப்பட்ட பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று முழக்கமிட்டனர்.
விருதுநகர் எஸ்பி மனோகர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரெங்கன், மாவட்ட பொறுப்பாளர் வெற்றிவேல், மாநில நிர்வாகி கஜேந்திரன் உட்பட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.