குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வர த்து அதிகரித்துள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாப நாசம் அணைக்கு விநாடிக்கு 1,728 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 804 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று முன்தினம் 63 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலையில் 64.70 அடியாக உயர்ந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 275 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 275 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப் பகுதிகளிலும், பிறஇடங்களிலும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 30, சேர்வலாறு- 42, மணிமுத்தாறு- 3.8, கொடுமுடியாறு- 10, சேரன்மகாதேவி- 1, ராதாபுரம்- 8, களக்காடு- 2.6, கடனா- 7, ராமநதி- 15, கருப்பாநதி- 18, குண்டாறு- 47, அடவிநயினார்- 30, ஆய்க்குடி- 14, செங்கோட்டை- 21, தென்காசி- 13, சிவகிரி- 3.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். இதனால் அருவியில் குளிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லநேரிட்டது. இதுபோல் களக்காடு தலையணையிலும் வெள்ளப் பெருக்கு காரணமாக அங்கும் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்ததால் நேற்று முன்தினம் மாலையிலிருந்து நேற்று காலை வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதையடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் சுற் றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் பிரதான அருவி உள்ளிட்ட அனைத்து அருவி களிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க மீண்டும் தடைவிதிக்கப்பட்டது.
