Last Updated : 14 Jul, 2022 11:02 PM

 

Published : 14 Jul 2022 11:02 PM
Last Updated : 14 Jul 2022 11:02 PM

கே.பி.முனுசாமிக்கு குவாரி? - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

கோவை: “கடந்த மாதம் 20 குவாரிகள் ஒப்பந்தப்புள்ளி மூலம் விட்டோம். அதில் அதிக தொகை ஒப்பந்தம் கோரி ஒன்றை கே.பி.முனுசாமி எடுத்துள்ளார்” என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

கீழ்பவானியில் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கோவையில் இன்று (ஜூலை 14) ஆலோசனை நடத்தினர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியது: "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை பற்றி கேட்டறிவது தொடர்பாக அவருடைய மருத்துவரிடம் பேசினேன். முதல்வர் நலமுடன் உள்ளார். அவர் மூன்று தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளார்.

கீழ்பவானியில் உள்ள வாய்க்கால்களில் எல்லாம் கான்கிரீட் தளம் போடுவது பற்றி உலக வங்கியில் பணம் வாங்கி ஒரு குழுவினர் மேற்கொள்கின்றனர். கான்கிரீட் தளம் போட வேண்டும் என ஒரு குழுவினரும், போடக்கூடாது என ஒரு குழுவினரும் வலியுறுத்துகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக மேற்கண்ட இரண்டு குழுக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மீண்டும் ஒரு சுற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு முடிவு காணப்படும்.

முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் முன்பு போல் இல்லை. அதிமுகவின் கே.பி.முனுசாமிக்கு சொந்தமான குவாரிக்கு நாங்கள் முன்னரே சீல் வைத்துள்ளோம். நாங்கள் ஒன்றும் அவருக்கு குவாரி தரவில்லை.

கடந்த மாதம் 20 குவாரிகள் ஒப்பந்தப்புள்ளி மூலம் விட்டோம். அதில் அதிக தொகை ஒப்பந்தம் கோரி ஒன்றை அவர் எடுத்துள்ளார். அதுதானே தவிர, இதில் வேறொன்றும் இல்லை.

திமுகவுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டு என சிலர் அரசியல் விமர்சனம் செய்கின்றனர். அதைப்பற்றி வேறொன்றும் சொல்வதற்கு இல்லை" என்றார் துறைமுருகன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x