Last Updated : 14 Jul, 2022 08:47 PM

 

Published : 14 Jul 2022 08:47 PM
Last Updated : 14 Jul 2022 08:47 PM

புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகரிப்பு: புறவழிச்சாலை பணியை தொடங்குவது எப்போது?

குழந்தை இறந்ததால் சாலையில் அமர்ந்து கண்ணீர் விடும் அவரது குடும்பத்தினர்.

புதுச்சேரி: புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் இந்திராகாந்தி சிலையிலிருந்து மூலக்குளம் வரை விபத்துகள் நாள்தோறும் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அச்சத்திலுள்ளனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டிய புறவழிச்சாலை பணியை தொடங்காமல் புதுச்சேரி அரசு காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் நாளுக்குநாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. ஆனால் சாலைகள் விரிவாக்கம், புதியதாக உருவாக்குவது உள்ளிட்டஏதும் நடைபெறவில்லை. போக்குவரத்து போலீஸார் யாரும் இச்சாலையில் பணியில் இருப்பதும் இல்லை. அத்தியாவசிய பகுதிகளிலும், வாய்ப்புகள் உள்ள பகுதிகளிலும்கூட சாலை விரிவாக்கமோ, புதியதாக உருவாக்குவதோ நடைபெறாமல் உள்ளது.

குறிப்பாக புதுச்சேரி நகரப்பகுதியில் இருந்து இந்திராகாந்தி சிலை வழியாக வில்லியனூர் செல்லும் சாலை மூலக்குளம் வரை கடும் போக்குவரத்து நெரிசலுடன் உள்ளது.

இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையோ 6 வழிச்சாலையில் செல்லும் அளவிற்கு உள்ளது. ஆனால் இச்சாலை இருவழிச்சாலையாக மட்டுமே உள்ளது. அத்துடன் இச்சாலையும் மோசமாக உள்ளது.

புதுச்சேரி -விழுப்புரம் சாலையில் இந்திராகாந்தி சிக்னல் அருகே இருபுறமும் பஸ் நிறுத்தத்தால் பின் வரும் வாகனங்கள் நிற்க்கும் சுழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அடிக்கடி போக்குவரத்து நேரில்சல் ஏற்பட்டுவருகிறது.

இதற்கு தீர்வு காண கடந்த 2010ம் ஆண்டு அரும்பார்த்தபுரம் பகுதியிலிருந்து முதலியார்பேட்டை ஜான்பால் நகர் வரை 4.5 கிமீ வரை நூறடி புறவழிச்சாலை அமைக்கத் திட்டமிட்டப்பட்டது. ஆனால் அப்பணிகள் முழுமையடையவில்லை. கடந்த சில மாதங்கள் முன்பு புதுச்சேரிக்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

இச்சாலையானது ரூ. 26.06 கோடியில் அமையும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறினர். இறுதியில் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கும் என தெரிவித்தனர் ஆனால் ஏதும் நடக்கவில்லை. இச்சாலையில் விபத்துகள் அதிகளவில் தொடர்கின்றன. இன்று இரு விபத்துகள் இச்சாலையில் நடந்தன. தந்தை கண் முன்னே பள்ளிக்கு சென்ற சிறுவன் உயிரிழந்தார். தடுப்புக்கட்டையில் தனியார் பஸ் ஏறி விபத்துக்குள்ளானது.

இதுபற்றி எதிர்க்கட்சித்தலைவர் சிவா கூறுகையில், "மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டியும் புறவழிச்சாலைக்கு டெண்டர் விடப்படவில்லை. ரெட்டியார்பாளையம் சாலைக்கு மாற்றுப்பாதையான இச்சாலைப்பணியை அரசு விரைவுப்படுத்தவேண்டும். தினமும் இச்சாலைகளில் விபத்து நடக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து காரில் சென்ற இருவரும், மொபெட்டில் பணிக்கு சென்ற பெண்ணும், பள்ளிச்சென்ற சிறுவனும் என உயிரிழப்புகள் தொடர்கிறது. அத்துடன் வாகனங்கள் மோதி காயம் அடைவோரும் அதிகமளவில் உள்ளனர்.

இச்சாலை வழியாகதான் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. நாள்தோறும் பெண்கள், குழந்தைகள் அதிகளவில் பயணிக்கின்றனர். புறவழிச்சாலை பணியை உடனடியாக தொடங்காவிட்டால் திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தும்" என்று குறிப்பிட்டார்.

அமித்ஷா அடிக்கல் நாட்டியும் பணிகள் நடைபெறாமல் உள்ள புறவழிச்சாலை

பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் அரும்பார்த்தபுரத்திலிருந்து அமையும் புறவழிச்சாலைக்கு வரும் 28ல் டெண்டர் விடப்படவுள்ளது. இதுபற்றி அமைச்சர் லட்சுமி நாராயணனும் உறுதி செய்துள்ளார். டெண்டர் விடப்பட்டவுடன் சாலை அமைக்கும் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

போக்குவரத்தை சீரமைக்க போலீஸார் தேவை: பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "இந்திராகாந்தி சிலையிலிருந்து மூலக்குளம் வரை சாலையோரம் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்தை போக்குவரத்து போலீஸார் சீரமைக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி நேரங்களில் இச்சாலையில் போக்குவரத்து போலீஸார், ஐஆர்பிஎன் போலீஸாரை பாதுகாப்பு பணிகளில் கூடுதலாக நியமிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறி, தவறான வழியில் வாகனத்தை இயக்கினால் பறிமுதல் செய்யவேண்டும். அதிக சிசி கொண்ட டூவீலர்கள் அதிகளவில் இப்பகுதியில் இயக்கி விதிமீறினால் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டனர்.

போக்குவரத்து எஸ்பி மாறனிடம் கேட்டதற்கு, "போக்குவரத்தை சீரமைக்க உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்கவுள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x