அதிமுக தற்போது சாதி ரீதியான கட்சியாக மாறி வருவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

அரியலூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
அரியலூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
Updated on
1 min read

அரியலூர்: அதிமுக தற்போது சாதி ரீதியான கட்சியாக மாறி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டினார்.

அரியலூரில் அமமுக செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 14) நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசும்போது, ''தற்போது அதிமுகவில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்களையும் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளதாக வெளிவந்துள்ள ஆடியோவில், அதிமுகவில் நடப்பவை குறித்து உண்மையாக பேசியுள்ளார்.

ஆனால், அதனை அவர் யாருக்கோ பயந்து கொண்டு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இதை நான் பேசியபோது என் மீது வழக்கு தொடுக்கப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார். அந்த வழக்கை சந்திக்க தயார். அப்போது ஆடியோவில் உள்ள உண்மைத்தன்மை ஆராயப்பட்டு அதிமுகவில் நடக்கக்கூடிய அனைத்து சம்பவங்களும் தொண்டர்களுக்கு தெரியவரும்.

அதிமுகவில் தற்போது சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதி ரீதியாக பிரித்து அவர்களுக்குள் சண்டையே மூட்டி விட எடப்பாடி தரப்பு தயாராகி வருகிறது. துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள்'' என்றார்.

கூட்டத்தில் கட்சியின் துணைச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்டச் செயலாளர்கள் அரியலூர் துரை.மணிவேல், பெரம்பலூர் கார்த்திகேயன், தஞ்சை மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in