ராமேசுவரம் - தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து: பாம்பனில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

பாம்பன் கால்வாயைத் தூர்வாருவது தொடர்பாக  ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு. படம்: எல். பாலச்சந்தர்
பாம்பன் கால்வாயைத் தூர்வாருவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு. படம்: எல். பாலச்சந்தர்
Updated on
1 min read

ராமேசுவரம் - தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

பாம்பன் கால்வாயைத் தூர்வாரும் பணி தொடர்பாக பாம்பனில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாகர் மாலா திட்டத்தின் கீழ் பாம்பன் கால்வாயைத் தூர்வாருவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பாம்பன் கால்வாயை 10 மீட்டர் வரையிலும் தூர்வாரி ஆழப்படுத்தினால் இலங்கையைச் சுற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் பாம்பனைக் கடந்து செல்வதுடன் பயண தூரமும் குறையும்.

மேலும், ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போக்குவரத்தை விரிவுபடுத்துதல், ராமேசுவரம் துறைமுகத்துக்கான நிர்வாக அலுவலகம் அமைப்பது மற்றும் ராமேசுவரத்திலிருந்து மீண்டும் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்கு வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வையும் மேற்கொண்டேன், என்றார்.

ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கொந்தகை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டப்பட்டுவருகிறது. இப்பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கீழடி அகழ் வைப்பகம் செட்டிநாடு கட்டிட அமைப்பில் கட்டப்பட்டு வருகிறது. அகழ் வைப்பகப் பணி 99 சதவீதம் முடிவடைந்து விட்டது. தற்போது தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இது உலகத் தரத்தில் இருக்கும். இப்பணி இன்னும் 2 மாதங்களில் முடிவடைந்து விடும். அதன்பிறகு முதல்வர் திறந்து வைப்பார்.

மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கீழடிக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அகழ் வைப்பகத்தில் இரவு 8 மணி வரை பார்வையிட அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கீழடியில் பேருந்து நிறுத்தம் கட்டப்படும். சாலையும் விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in