

அதிமுகவினர் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மளிகை கடைகள் மூலமாக அதிமுகவினர் பணத்தை கொடுப்பதாக இப்போது எனக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.
வானூர் தொகுதி மக்கள் நல கூட்டணியின் விடுதலை சிறுத்தை வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அத்தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு கிராமத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:
இங்கு கடலில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்த பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இன்று மதிமுக ஆரம்பித்த நாள். இந்த நாளில் எப்போதுமே நான் சென்னை தாயகத்தில் கொடியேற்றுவது வழக்கம். தேர்தல் பிரச்சாரம் இருப்பதால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனாலும் உங்களை சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
அதிமுகவினர் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.. மளிகை கடைகள் மூலமாக அதிமுகவினர் பணத்தை கொடுப்பதாக இப்போது எனக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கியதே கருணாநிதிதான். அதிமுக மற்றும் திமுகவினர் கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள்.
பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் அவர்களது தொண்டர்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார் என்று கூறினார்.
மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் மீது தாக்குதல் நடந்தால் அதை கண்டுகொள்ள வேண்டாம் என போலீஸாருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.