கர்நாடக அணைகளில் இருந்து 91 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: ஒகேனக்கல்லில் தொடர் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அணைகளில் இருந்து 91 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: ஒகேனக்கல்லில் தொடர் வெள்ளப்பெருக்கு
Updated on
1 min read

சேலம் / தருமபுரி: கர்நாடக அணைகளில் இருந்து நேற்று விநாடிக்கு 91 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 53 ஆயிரத்து 351 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 38 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு விநாடிக்கு 91 ஆயிரத்து 335 கனஅடி நீர் திறந்துவிட‌ப்பட்டுள்ள‌து.

இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து பதிவானது.

நீர்வரத்து நேற்று நிலவரத்தை விட சற்றே குறைந்தபோதும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலவுவதால் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. காவிரிக் கரையோர பகுதிகளை அரசு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 95,515 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை விநாடிக்கு 98,208 கனஅடியாகவும், மதியம் 1,00,153 கனஅடியாகவும் அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் நேற்று 106.70 அடியாகவும் நீர் இருப்பு 73.79 டிஎம்சியாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in