Published : 14 Jul 2022 07:27 AM
Last Updated : 14 Jul 2022 07:27 AM
மாமல்லபுரம்/ காஞ்சி/ செங்கை: மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதையொட்டி, சுற்றுலா பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரத்தில் மாரத்தான் ஓட்டமும் செங்கல்பட்டில் சைக்கிள் பேரணியும் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேசசெஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆக.10-ம் தேதிவரை நடைபெற உள்ளன. இதற்கான பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சுற்றுலாத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தார். இதில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதிக்கு சொந்தமான நிலத்தில் சுற்றுச்சுவர் அமைத்து முறையாக பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அர்ஜூனன் தபசு சிற்பத்தை சுற்றி மின்விளக்குகள் அமைத்து ஒலி, ஒளி காட்சிகளுடன் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் வகையிலான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள 14 ஏக்கர் காலி நிலத்தின் மூலம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு வருவாய் கிடைக்கும் வகையில் மேம்படுத்துமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
முன்னதாக சென்னையில் மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார். இதில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத் துறை இயக்குநர் சந்திப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
காஞ்சியில் மாரத்தான்
இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த மாரத்தானை காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து பேருந்து நிலையம், காமராஜர் வீதி, மூங்கில் மண்டபம், மேட்டுத் தெரு, காவலான் தெரு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர். இதில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செங்கையில் பேரணி
இதேபோல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT