Published : 13 May 2016 12:39 PM
Last Updated : 13 May 2016 12:39 PM

தமிழகத்தில் அன்புமணி அலை: ராமதாஸ் பேச்சு

தமிழகத்தில் அன்புமணி அலை சூறாவளியாக சுற்றிவருவதால், பாமக 214 இடங்களைக் கைப்பற்றும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

ஓமலூர் தொகுதி பாமக வேட்பாளர் தமிழரசுவை ஆதரித்து தீவட்டிப்பட்டியில் அவர் பேசியதாவது:

நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் பாமக தான் நேர்மையான கட்சி என்று ஒட்டுமொத்த மக்களும் உணர்ந்துள்ளனர். எனவேதான், அன்புமணியை பொது வேட்பாளராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க பிற கட்சிகள் தயாராகிவிட்டன. அக்கட்சிகள் கடந்த சில நாட்களாக பணத்தை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். திமுக, அதிமுக-வினர் சொந்தமாக மது ஆலையை நடத்தி, ரூ.70 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளனர். இந்த இரு கட்சிகளும் இலவசங்களை கொடுத்து மக்களை அடிமையாக்கி விட்டனர். இரு கட்சிகளும் மக்களின் பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ளனர்.

தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில் ஒரு திட்டத்தை நிறைவேற்ற 100-ல் 60 சதவீதம் அளவுக்கு கொள்ளையடித்துள்ளனர். மீதியுள்ள 40 சதவீத தொகையில் ஒரு திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றியிருக்க முடியும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

இந்தமுறை விட்டால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கியிருந்த நடுநிலையாளர்கள், பாமக-வுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். பாமக-வுக்கு ஆதரவு பெருகியுள்ளது.

தமிழகத்தில் அன்புமணியின் அலை சூறாவளியாக சுற்றி வருகிறது. எனவே, இந்த தேர்தலில் பாமக 214 தொகுதிகளை கைப்பற்றும். பாமக 80 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சிகள் 20 சதவீத வாக்குகளை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x