

திருவாரூரில் தேர் கவிழ்ந்து பலியானோர் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே உள்ள திருக்கர வாசல் தியாகராஜ சுவாமி கோயில் தேர் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திரனருக்கு இரங்கல் தெரிவித்து கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "திருவாரூரிலிருந்து திருக்குவளை செல்லும் வழியில், கச்சனம் அருகே உள்ள திருக்காரவாசல் கிராமத்தில் கோவில் திருவிழாவினையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில், தேர் நிலையிலிருந்து கிளம்பிய சிறிது தூரத்திலேயே தேரின் முன்பக்க வலதுபுற சக்கரம் திடீரென மண் தரையில் புதையத் தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் சேறும் சகதியுமாக இருந்த மண் தரையில் 100 டன் எடையுள்ள தேரின் பாரம் அழுத்தியதால், சக்கரம் பூமிக்குள் இறங்கி, தேர் முன் பக்கமாக கவிழ்ந்துள்ளது.
அப்போது சக்கரத்துக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு வந்த கல்யாண சுந்தரம், முருகையன் ஆகியோர் தேருக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இறந்து விட்டார்கள் என்ற செய்தியினை ஏடுகள் மூலமாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மறைந்த கல்யாணசுந்தரம், முருகையன் இருவருமே எனது திருவாரூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களின் மறைவால் பெரிதும் வருந்தும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி 2-வது முறையாக திருவாரூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.