

சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் இரவு நேரங்களில் பாலங்கள் மற்றும் நடைபாதைகளில் தூங்குபவர்களை நாம் பார்த்து இருப்போம். சென்னையில் பல இடங்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்க முடியும். எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் அன்றடாம் வாழ்க்கை நடத்தி வரும் இவர்களின் நிலை மழை நேரங்களில் மிகவும் மோசமானதாக இருக்கும்.
மழை நேரங்களில் பாலங்களுக்குக் கீழ்ப் பகுதியிலும், பேருந்து நிலையங்களிலும் தஞ்சம் அடைந்து உணவு சமைக்க, தூங்க கூட வழி இல்லாமல் பெரும் இன்னல்களுக்கு இடையில்தான் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருப்பார்கள்.
இந்தியாவில் மொத்தம் 2.45 லட்சம் பேர் வீடுகள் இல்லாமல் வசிப்பதாக மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 39,512 பேரும், குஜராத்தில் 35,293 பேரும் சாலையோரம் வசிக்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 14,040 பேர் சாலையோரம் வீடுகள் இல்லாமல் வசிக்கின்றனர். இந்தியாவில் அதிகம் பேர் சாலையோரம் வசிப்பவர்கள் வாழும் மாநிலங்களில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.
இவர்களின் வசதிக்காக மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தியா முழுவதும் மொத்தம் 2,414 காப்பகங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 1,678 காப்பகங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் 96,386 பேர் தங்க முடியும். தமிழகத்திலும் இதுபோன்று 229 காப்பகங்கள் உள்ளன.
ஆனால், இந்த காப்பங்கள் அனைத்தும், ஆண், பெண், திருநங்கைகள் என்று 3 வகையாகதான் இருக்கும். ஒரு குடும்பம் ஒரே இடத்தில் தங்கும் வகையிலான காப்பகங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக குடும்பமாக உள்ளவர்கள் இந்தக் காப்பகங்களில் வசிக்க முடியாத நிலை இருந்தது. எனவே, குடும்பமாக உள்ளவர்கள் தங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது.
முதல் கட்டமாக சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களை மறு குடியமர்வு செய்ய நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முந்தியால் பேட்டை, செயின்ட் சேவியர் சாலை, நாராயண சாரன் தெருவில் வசிக்கும் 1,500 குடும்பங்களை மறுகுடியமர்த்தம் செய்ய 9 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், "சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு குடியிருப்புகள் ஏற்படுத்துவது தொடர்பாக பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் சுமார் 1,500 குடும்பங்களை மறுகுடியமர்த்தம் செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மக்கள் பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மறுகுடியமர்த்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வால்டாக்ஸ் சாலை பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பண்டகச் சாலை கிடங்கில் உள்ள 2 ஏக்கர் இடம், ஏழு கிணறு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் இடம் மற்றும் பிரகாசம் சாலையில் உள்ள கல்வித்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் இடங்களில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக இன்று அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
குறிப்பாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்கள் தற்போது இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக முடிவு செய்துள்ளது வரவேற்கதக்கது.