தொடரும் மலக்குழி மரணங்கள்: தடை சட்டத்தை அமல்படுத்த மாவட்ட கண்காணிப்பு குழு மாற்றியமைப்பு

தொடரும் மலக்குழி மரணங்கள்: தடை சட்டத்தை அமல்படுத்த மாவட்ட கண்காணிப்பு குழு மாற்றியமைப்பு
Updated on
1 min read

சென்னை: மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிக்க மாவட்ட வாரியான கண்காணிப்பு (விஜிலென்ஸ்) குழுக்களை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கழிவு நீர் தொட்டிகளுக்குள் சிக்கி விஷவாயு தாக்கி பணியாளர்கள் மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த 7 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் கழிவு நீர் தொட்டிகளில் விஷவாயு தாக்கி மரணம் அடைந்துள்ளனர். எனவே இது போன்ற மரணங்களைத் தடுக்க மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த மாவட்ட வாரியான விஜிலென்ஸ் குழுக்களை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உட் கோட்ட அளவிலான குழுவையும் தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவிற்கு ஆதிதிராடவிடர் துறை அலுலவர் உறுப்பினர் செயலளராக நியமிக்கப்பட்டுள்ளார். தனி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், காவல் கண்காணிப்பாளர், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர், அணைத்து நகராட்சி ஆணையர்கள், ரயில்வே வாரிய உறுப்பினர், நிதி உதவி அளிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், நான்கு சமூக சேவகர்கள், சட்டத்தை அமல்படுத்த தேவையான அரசு அலுவலர்கள் என்று 8 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

உட் கேட்ட அளவிலான குழுவிற்கு உட் கோட்ட நடுவர் தலைவராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி உறுப்பினர் செயலராகவும் இருப்பார். மேலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் உறுப்பினர்களாக உள்ள துறைகளின் உட் கோட்ட அலுவலர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்த குழுக்கள் இது தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்று தருதல், இது தொடர்பான மரணங்கள் விசாரணை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in