

சென்னை: புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் நான்முக சிங்க வெண்கலச் சிலையில் உள்ள சிங்கங்களின் முகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதற்கு புதிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அசோகரின் பௌத்த சாரநாத் தூணின் நான்முக சிங்க உருவம்தான் இந்திய அரசின்சின்னமாகத் தேர்வு செய்யப்பட்டு இன்றுவரை நாணயங்களிலும் இதர அரசு முத்திரைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் நான்முக சிங்க வெண்கலச் சிலையில் உள்ள சிங்கங்களின் முகங்கள் சாரநாத் தூணில் உள்ள சிங்கமுகம் போல் இல்லாமல் கோரமாக இருப்பது போன்று வடிவமைப்பு செய்திருப்பது இயல்பாக நடந்ததாகத் தெரியவில்லை.
அசோகர் சின்னத்தில் சிங்கங்கள் கம்பீரம் இருக்குமே தவிர 'வெறித்ததுமான' முகம் இருக்காது. பருத்தும் வெறித்தும் நிற்கும் இச்சிங்கங்கள் சாரநாத் சிங்கங்கள் போன்று இல்லை. மத்திய அரசின் திரிக்கப்பட்ட வேறு சிங்கங்கள் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் தேசிய சின்னம் திரிக்கப்பட்டிருப்பது எதேச்சதிகார நடவடிக்கையாக அமைந்துள்ளது.
நவீனத் தொழில்நுட்பங்கள் மிக அதிகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழலில் குறிப்பாக மத்திய அரசு சொல்லுகிற டிஜிட்டல் இந்தியா சூழலில் மாபெரும் வரலாற்றுத் திரிபைச் செய்துவரும் மத்திய அரசின் இந்த செயல்கடும் கண்டனத்துக்குரியது.
எனவே அந்த சிலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு உண்மையான வடிவத்தில் அசோக சின்னத்தை வடிவமைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.