

கோடநாடு விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொள்ளை முயற்சி, காவலாளி கொலை தொடர்பாக 10 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.
கோவை மேற்கு மண்டல ஐஜிஆர்.சுதாகரின் நேரடி மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் ஏற்கெனவே 2 முறை போலீஸார் விசாரித்திருந்தனர். இந்நிலையில், கோவைபோலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக நேற்று விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதன்மையான நபரான கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த இவர்,ஆறுக்குட்டியிடமும் ஓட்டுநராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் அடிப்படையில் அவரிடம் போலீஸார் விசாரித்தனர். மாலையில் விசாரணை முடிந்ததும் ஆறுக்குட்டி புறப்பட்டுச் சென்றார்.