

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள், பயிற்சி பெறுவதற்கான பயிற்சி மருத்துவர் இடங்களை 7.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் (வெளிநாட்டு பிரிவு) செயலாளர் மா.செந்தில்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் கூறியதாவது:
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு, மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு, இந்தியாவில் ஓராண்டு காலம் மருத்துவப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரே, மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவை பெற்று, மருத்துவராக பணியாற்ற முடியும்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் மருத்துவப் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு இல்லாமல் ஏராளமான மருத்துவ மாணவர்கள் காத்திருக்கின்றனர். மருத்துவப் பயிற்சி மேற்கொள்வதற்கான இடங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாககுறைக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். மாவட்ட தலைமை மருத்துவமனைகள், பெரிய தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி மேற்கொள்ள ஏற்கெனவே இருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டதாலும் இப்பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது.
பயிற்சி மருத்துவர் இடங்களை 7.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக தேசிய மருத்துவ ஆணையம் உயர்த்த வேண்டும். ஏற்கெனவே இருந்தது போல, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் மருத்துவப் பயிற்சி மேற்கொள்ள மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுரைப்படி, 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி பெற தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
கரோனா காலத்தில் பல்வேறு நாடுகளில் மருத்துவப் படிப்பை ஆன்லைன் மூலம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கி மருத்துவர்களாக பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.