Published : 13 Jul 2022 07:21 AM
Last Updated : 13 Jul 2022 07:21 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 9-ம் தேதி நடந்து முடிந்த 15 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவி உட்பட பெரும்பாலான இடங்களை திமுகவினர் கைப்பற்றினர்.
தமிழகம் முழுவதும் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடந்தது. இதில் ஏராளமானோர் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தனர். பலர் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கியதால் கணிசாமான பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்றுதொடங்கி வெற்றி பெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது.
ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சின்னம் ஒதுக்கப்படாது என்பதால் அனைத்துக் கட்சிவேட்பாளர்களுக்கும் சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. இதில்திமுக மற்றும் அதிமுக ஆதரவாளர்களிடம் கடும் போட்டி நிலவியது.இதில் பெரும்பாலான இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வதுவார்டில் மொத்தம் 4,510 வாக்குகள் இருந்தன. இதில் 2,597 வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்த வாக்குகள் நேற்றுஎண்ணப்பட்டன. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.சுப்புராயன் 1,759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் வ.வேணுகோபால் 568 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
பாமக- மு.கன்னிவேலுக்கு 88வாக்குகளும் அமமுக - பெ.சீனுவாசனுக்கு 78 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி- வெ.சத்தியமூர்த்தி 37 வாக்குகளும் பெற்றனர். மற்றொரு சுயேட்சை வேட்பாளர் தி.சுரேஷ் 67 வாக்குகள் பெற்றார். சுப்புராயன், வேணுகோபாலை தவிர்த்து மற்றவர்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.
இதேபோல் உத்திரமேரூர் ஒன்றியம், அனுமந்தண்டலம் ஊராட்சி 6-வது வார்டில் மு.ஹரிதாஸும் கருவேப்பம்பூண்டி ஊராட்சி 3-வது வார்டில் சசியும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சிவபுரம் ஊராட்சி 5-வதுவார்டில் நீ.மகேஸ்வரியும் உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் அதிமுக ஆதரவாளர் 1,433 வாக்குகளும் திமுக ஆதரவாளர் 1,430 வாக்குகளும் பெற்றனர். இதில் 3 வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவின் யோகசுந்தரி வெற்றி பெற்றார்.
இதேபோல் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சி 4-வது வார்டில் கே.வேணி 368 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். புனிததோமையர்மலை ஒன்றியம் திரிசூலம் ஊராட்சி 1-வது வார்டில் 546 வாக்குகள் பெற்று மாரிமுத்துவும் நன்மங்கலம் ஊராட்சி 1-வதுவார்டில் 482 வாக்குகள் பெற்று பாலாஜியும் வெற்றிபெற்றனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு ஒன்றிய 1-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ச.கி.சேகர் வெற்றி பெற்றார். பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ச.ச.பிரதீப் அசோக்குமார் வெற்றிபெற்றார்.
பூந்தமல்லி ஒன்றியம் அகரமேல் ஊராட்சியின் 3-வது வார்டுஉறுப்பினராக கி.ராமச்சந்திரன், மீஞ்சூர் ஒன்றியம் மெதூர் ஊராட்சியின் 3-வது வார்டு உறுப்பினராக ச.சீதாராமன், சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக கோ.செல்வன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT