

பெரும்பாக்கம்: செங்கல்பட்டு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான நூக்கம்பாளையம் மேம்பாலம், அரசன்கழனி ஏரி மற்றும் மதுரப்பாக்கம் ஓடை - தெற்கு டி.எல்.எப் ஆகியஇடங்களில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வுசெய்து, நிவரணப் பணிகளை துரிதப்படுத்தி, அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி வெள்ளத் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாவட்டம் - சோழிங்கநல்லூர் வட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் - தாம்பரம் வட்டம், பெரும்பாக்கம் மற்றும்செம்மஞ்சேரியில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கால் வாய்க்கு இருபுறமும் ரூ.24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் தாங்கு தடுப்பு சுவர் கட்டும் பணி,நூக்கம்பாளையம் மேம்பாலத்தில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணி ஆகியவற்றை முதல்வர் பார்வையிட்டார்.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அரசன்கழனி வேலன்தாங்கல் ஏரி முதல் கழுவெளி வரை மூடுதளத்துடன் கூடிய பெருவடிகால் கால்வாய் கட்டும் பணியில், அரசன்கழனி ஏரியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணியும் அதனைத் தொடர்ந்து ரூ. 21 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மதுரப்பாக்கம் ஓடையிலிருந்து டி.எல்.எப். வளாக சாலையில் 500 மீட்டர் வரை அவசரகால வெள்ளநீர் கடத்தும் பெருவடிகால் அமைக்கும் பணியும் மதுரப்பாக்கம் ஓடை, தெற்குடி.எல்.எப். பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கே.வீரராகவ ராவ், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய எம்டி ம.கோவிந்த ராவ், ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், முதன்மைப் பொறியாளர் முரளிதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.