

புதுச்சேரி - விழுப்புரம் இடையே இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பயணிகள் ரயில் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா தொற்றினால் முக்கிய வழித் தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்குப் பின் பயணிகள் ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது புதுச்சேரி - விழுப்புரம் இடையே நான்கு வழிச் சாலைக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதனால் சாலை வழியாக பேருந்து பயணம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அதனால், புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் போக்கு வரத்தை மீண்டும் தொடங்க கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதையடுத்து மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து நேற்று தொடங்கியது. அதன்படி காலை 5.25 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி புறப்பட்டு செல்லும் பயணிகள் ரயிலை மட்டும் இயக்க தற்போது தெற்கு ரயில்வே அனுமதியளித்தது. இரு ஆண்டுகளுக்குப் பின் விழுப்புரம் - புதுச்சேரி இடையே மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
இதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் காலை 6.25 மணிக்கு புதுச்சேரி வந்தடைந்ததும்.
மறுமார்க்கத்தில் புதுச்சேரியில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.05க்கு விழுப்புரம் வந்தடைந்தது. அதேபோல் விழுப்புரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் மாலை 6.45க்கு புதுச்சேரி வந்தடைந்தது.
மறுமார்க்கத்தில் புதுச்சேரியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்ட ரயில் இரவு 8 மணிக்கு விழுப்புரம் வந்தடைந்தது. இரண்டு ஆண்டுகளாக இந்த பயணிகள் ரயில் இயக்கப்படாத நிலையில், முதல் நாளிலேயே பயணிகள் ஆர்வத்துடன் பயணித்தனர்.