

கமுதி தாலுகாவில் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு விதைப் பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறுதானிய சிறப்பு மண்டலம் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் சிறுதானியம் சிறப்பு மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பாக 8,942 ஹெக்டேர் பரப்பில் சிறுதானியம் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, குதிரைவாலி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் மாவட்டத்தில் 14,030 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண்மைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுதானிய உணவு பொருட்கள் நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருப்பதாலும், சிறுதானியங்களில் இரும்பு, கால்சியம், நார்ச்சத்து அதிகம் இருப்பதாலும் வேளாண்மை உழவர் நலத்துறை விவசாயிகளை ஊக்கப்படுத்தி, அதன் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கமுதி வட்டத்தில் சிறுதானிய பயிர்களின் சான்று விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தரைக்குடி, காவடிப்பட்டி, கோரைப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் சிறுதானிய விதைப்பண்ணை திடல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.கண்ணையா(பொ), வேளாண்மை துணை இயக்குநர் சேக் அப்துல்லா (மாநில திட்டம்), வேளாண்மை துணை இயக்குநர் பாஸ்கர் மணியன் (மத்திய திட்டம்) உள்ளிட்டோர் பார்வையிட்டனர். கமுதி வட்டார வேளாண்மை அலுவலர் சந்தோஷ் மற்றும் உதவி விதை அலுவலர்கள் சரவணன், வெற்றிசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.