Published : 12 Jul 2022 09:49 PM
Last Updated : 12 Jul 2022 09:49 PM

முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா: விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கரேனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

அன்புமணி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நலமடைய வேண்டும்; அரசு நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என்று விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 12, 2022

அண்ணாமலை.கே: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், “கரோனா தொற்றின் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 12, 2022

எம்.எச்.ஜவாஹிருல்லா: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, "ஒரு தேனீயின் சுறுசுறுப்போடு மக்கள் பணியாற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி என அறிந்து வேதனை அடைந்தேன். மிக விரைவாக குணமடைந்து மீண்டும் மக்கள் பணிக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் இந்த தருணத்தில் தமிழக மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x