Published : 12 Jul 2022 07:56 PM
Last Updated : 12 Jul 2022 07:56 PM

“எல்.முருகனை புறக்கணிப்பது ஏன்?” - பல்கலை. பட்டமளிப்பு விழா விவகாரத்தில் பொன்முடிக்கு தமிழக பாஜக கேள்வி

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | கோப்புப் படம்

சென்னை: “எல்.முருகனுக்கு அடுத்து பேசுவது கவுரவக் குறைவு என்று அமைச்சர் பொன்முடி எண்ணுகிறாரா?” என்று மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா விவகாரத்தில் தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து இன்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் எனக்கு அடுத்து பேசுவதற்காக கவுரவ விருந்தினர் ஒருவரை அழைத்து பேச வைக்கவுள்ளனர். இது வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். இவற்றைப் பார்க்கும்போது, பல்கலைக்கழகங்களிலே மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிற நடவடிக்கைகளிலே ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற ஐயம் எங்களுக்கு வருகின்ற காரணத்தால், நான் ப்ரோ சான்சலர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து, அதில் கலந்துகொள்வதாக இல்லை'' என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

உயர் கல்வித் துறை அமைச்சருக்கு பல்கலைக்கழகங்களின் அமைப்பு குறித்து தெரியவில்லையோ என தோன்றுகிறது. முடிவெடுப்பது ஆளுநரா அல்லது பல்கலைக்கழக வேந்தரா என்பதை அறியாமல் பேசுகிறார். கவுரவ விருந்தினர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என்பது தெரிந்தே அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார் என்று சந்தேகமாக உள்ளது. மத்திய அமைச்சர் முருகன் சட்டம் படித்தவர். சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பட்டியிலின சமுதாயத்தின் நலனிற்காக அல்லும் பகலும் உழைப்பவர். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக சிறப்பாக பணியாற்றியவர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அவரை பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டாம் என்று பொன்முடி தவிர்ப்பது ஏன்?

எல்.முருகனுக்கு அடுத்து பேசுவது கவுரவக் குறைவு என்று அமைச்சர் எண்ணுகிறாரா? சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் திமுகவுக்கு இந்த விவகாரத்தில் சகிப்புத்தன்மை இல்லாமல் போவது ஏன்? முருகனை புறக்கணிப்பதற்கு காரணம் என்ன?

வேந்தர் ஒவ்வொரு பல்கலைக்கழக விழாக்களிலும் ஒழுக்கம், நன்னெறி, கட்டுப்பாடு போன்றவற்றை மாணவர்களிடத்தில் பேசுவதை அமைச்சரால் தாங்கிக் கொள்ள முடியாது போனதால் புறக்கணிக்கிறாரோ?'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x