Published : 12 Jul 2022 06:44 PM
Last Updated : 12 Jul 2022 06:44 PM

“நான் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது” - சசிகலா

தஞ்சாவூர்: “அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து, வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதே என் எஞ்சியுள்ள வாழ்க்கையின் லட்சியமாக கருதுகிறேன்” என்று வி.கே.சசிகலா தெரிவித்தார்.

தஞ்சாவூரில் இன்று சசிகலா அணியுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வி.கே.சசிகலா பேசியது: “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இக்கட்டான சூழ்நிலையும், குழப்பங்களும் ஏற்பட்டது. நானோ, விதி வசத்தால் பெங்களூரில் சிறைப்பட்டு இருந்தேன். அதன்பிறகு பல்வேறு சூழ்ச்சிகள், துரோகங்கள் எப்படியெல்லாம் அரங்கேறியது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். இதன் காரணமாக, கட்டுக்கோப்பாக இருந்த நம் இயக்கம், எதிரிகளின் ஆசைப்படி சிதறிப்போனது.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்து நின்று செயல்பட்டாலும், அனைவரும் நம் இருபெரும் தலைவர்களின் கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடித்து வந்துள்ளார்கள். வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே, மிகப்பெரிய பொறுப்பு எனக்கு வந்துவிட்டது கழகத்திலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைத்தே பழக்கப்பட்டு விட்டேன். எனவே, அனைவரையும் ஒன்றுபடுத்தி இயக்கத்தை கண்டிப்பாக வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதே என் எஞ்சியுள்ள வாழ்க்கையின் லட்சியமாக கருதுகிறேன்.

அதிமுகவை வலிமைப்படுத்தி, அதை மீண்டும் அதே பழைய நிலைக்குகொண்டு வந்து, கழக ஆட்சியை மீண்டும் அரியணையில் ஏற்றுவதுதான் நம் அனைவரிடத்திலும் இருக்கின்ற ஒரே குறிக்கோள். இதை மனதில் வைத்து தான், அனைவரையும் ஒருங்கிணைத்து, ஓர் குடையின் கீழ் கொண்டுவந்து, தமிழகத்தில் அதிமுக தான் ஒரே வலிமையான கட்சி என்ற நிலையை அடைகின்ற உன்னதமான பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். அதேபோன்று பெங்களூரிலிருந்து வந்த நாள் முதல், இன்று வரை அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தைத்தான் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

நம் இயக்கத்துக்கு வலுசேர்க்கும் தொடக்கமாகத்தான், திவாகரனின் தலைமையில், "அண்ணா திராவிடர் கழகம்" என்ற தனி அமைப்பாக இதுநாள்வரை செயல்பட்டு வந்த நம் கழகத்தினர், எனது தலைமையில், தங்களை மீண்டும் தாய் கழகமான அதிமுகவோடு தங்களை இணைத்து கொண்டுள்ளார்கள்.

நம் இயக்கத்தில் நடந்த நிகழ்வுகள் மனதுக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது. ஒரு சில சுயநலவாதிகள் இருந்து கொண்டு, தாங்கள் இருக்கும் இயக்கம் எப்படிப்பட்ட ஒரு இயக்கம், எப்படிப்பட்ட தலைவர்களைக் கொண்ட ஒரு இயக்கம், நம் தலைவர்கள் பட்ட கஷ்டங்கள் என்ன, அவர்கள் செய்த தியாகங்கள் என்ன, எத்தனை கழகத் தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்காமல், தங்களுக்கு கிடைக்கின்ற ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நான் பெரியவன், நீ பெரியவன் என்று போட்டி போட்டு கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம். இதனால் அதிகம் பாதிப்படைவது அப்பாவி தொண்டர்கள் என்று நினைக்கும் போதுதான், என் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நடந்த பொதுக்குழுக்கள் தான் உண்மையான பொதுக்குழு. அதன்பிறகு நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக்குழுக்கள் அனைத்தும், நிர்வாகிகள் கூட்டமாகத்தான் நம் கழக தொண்டர்கள் பார்க்கிறார்கள்.

அதிமுகவின் விதிகளை யாருமே மாற்றியது இல்லை. இது மிகப்பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. இவர்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்துமே சட்டப்படி செல்லாது. இதற்கெல்லாம் விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் இருக்கின்ற வரை யாராலும் இந்த இயக்கத்தை அபகரித்துவிடவோ, அழித்துவிடவோ முடியாது. விரைவில் எல்லாவற்றையும் சரி செய்து, அனைவரையும் ஒருங்கிணைத்து மீண்டும் நம் இயக்கம், அதே மிடுக்கோடும், செருக்கோடும் புதுப் பொலிவு பெரும் என்பதை, இன்று நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்பி நரசிம்மன், முன்னாள் எம்எல்ஏ உமாதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x