

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மின்கசிவால் கணினி அறிவியல் துறைத் தலைவர் அறையில் தீ விபத்து ஏற்பட்டு கரும் புகை சூழ்ந்ததால் மேல்தளங்களில் வகுப்புகளில் இருந்த மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கணினி ஆய்வகம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை பத்திரமாக தப்பின.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். காலை 8.30 மணி முதல் 1 மணி வரை ஒரு பிரிவாகவும், 1.30 மணி முதல் 5 மணி வரை மற்றொரு பிரிவாகவும் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை கல்லூரியின் தரைத்தளத்தில் கணினி அறிவியல் பிரிவு துறைத்தலைவர் அறையில் திடீரென தீ பற்றி கரும்புகை எழுந்தது.
தீ வேகமாகி கரும்புகை சூழத் தொடங்கியது. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேல் தளங்களில் வகுப்புகளில் இருந்த மாணவிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். கரும்புகை வேகமாக சூழத்தொடங்கிய சூழலில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
விபத்து தொடர்பாக தீயணைப்பு வீரர்கள் கூறியது: "தரைதளத்தில் கணினி அறிவியல்துறை தலைவர் அறையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது அறையில் புத்தகங்கள், இருக்கை, ஏசி இயந்திரம், கணினி ஆகியவை எரிந்தன. அருகிலிருந்த கணினி ஆய்வகத்தில் சேதமில்லை. அங்கிருந்த ஏராளமான கணினிகளில் கரும்புகை மட்டும் படிந்து விட்டது. யாருக்கும் பாதிப்பு இல்லை" என்று வீரர்கள் கூறினர்.
அதே நேரத்தில் தீ விபத்து நிகழ்ந்த அருகிலுள்ள கட்டடத்திலுள்ள அறையில்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த அறைக்கு ஏதும் பாதிப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.