Published : 12 Jul 2022 03:13 PM
Last Updated : 12 Jul 2022 03:13 PM

பல்கலை. மாணவர்களிடையே அரசியலை புகுத்தும் நடவடிக்கைகளில் ஆளுநர்? - அமைச்சர் பொன்முடி சந்தேகம்

சென்னை: "பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இடையே அரசியலை புகுத்துகிற நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற ஐயம் எங்களுக்கு வருகின்ற காரணத்தால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து, அதில் கலந்துகொள்ளப்போவதில்லை" என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பொதுவாக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை, அந்த பல்கலைக்கழத்தின் நிர்வாகம், அதாவது துணைவேந்தர் உள்ளிட்டவர்கள்தான் நடத்துவது என்பது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்ற நடைமுறை. அதன் அடிப்படையில், நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. உயர் கல்வித் துறைக்கு எந்த அறிவிப்பு கொடுக்காமல், வேந்தரை மட்டும் அனுசரித்து துணைவேந்தர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சிறப்பு அழைப்பாளராக யாரை அழைப்பது என்பது உள்ளிட்ட விஷயங்களை உயர் கல்வித் துறையிடம் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னர், இறுதி செய்யப்படுபவர்களில் ஒருவரைதான் அழைக்க வேண்டும். ஆனால், அதுபோல எதுவும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக துணை வேந்தரிடம் கேட்டால், எனக்கு எதுவும் தெரியாது சார், ஆளுநர் அலுவலகத்தில் தகவல் வருகிறது என்கிறார்.

ஆளுநர் அலுவலகத்தில் உள்ள யாராவது கூட உயர் கல்வித் துறை அமைச்சரும், ப்ரோ சான்சலராக இருக்கக்கூடிய என்னை அழைப்பதா வேண்டாமா என்பது குறித்து கேட்டிருக்கலாம். அவர்களும் எதுவும் கேட்கவில்லை. சிறப்பு அழைப்பாளர்களை சீஃப் கெஸ்ட் என்று குறிப்பிடுவது வழக்கம். கவுரவ விருந்தினர் என்று யாரையும் அழைப்பது இல்லை. கவுரவ விருந்தினர் என்றால் யாருக்காவது முனைவர் பட்டம் கொடுத்தால், அவரைத்தான் கவுரவ விருந்தினர் அழைப்பது வழக்கம்.

ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு கவுரவ விருந்தினர் என்ற பெயரில் அழைக்கின்றனர். இதுவெல்லாம் தவறான செய்தி. பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகின்ற செயல்களிலே ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது. அதன் அடிப்படையில் உயர் கல்வித் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆளுநர், துணை வேந்தர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பேசியபோது, துணை வேந்தர் ஆளுநர் அலுவலகத்தில் இருந்துவந்த உத்தரவு என்கிறார்கள். ஆளுநர் அலுவலகத்தில் கேட்டால், இப்படித்தான் செய்வோம், என்ன செய்வீர்கள் என்று பார்க்கலாம் என்கிறார்கள்.

பட்டமளிப்பு விழாக்களில், சான்சலர் பேசுவதற்கு முன்னர் ப்ரோ சான்சலர் பேசுவதுதான் வழக்கம். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், கலந்துகொள்ள முடியாமல், வேந்தர் டெல்லி சென்றுவிட்டார். ப்ரோ சான்சலர் ஆக இருந்த நான்தான் அந்த விழாவை நடத்தி பட்டங்களைக் கொடுத்தேன்.

ஆனால், தற்போது எனக்கு அடுத்து பேசுவதற்காக கவுரவ விருந்தினர் ஒருவரை அழைத்து பேச வைக்கவுள்ளனர். இதுவேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். இவற்றை பார்க்கும்போது, பல்கலைக்கழகங்களிலே மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிற நடவடிக்கைகளிலே ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற ஐயம் எங்களுக்கு வருகின்ற காரணத்தால், நான் ப்ரோ சான்சலர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து, அதில் கலந்துகொள்வதாக இல்லை" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x