

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 265-வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு, தமிழக அரசுசார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் குருபூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரன், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள்தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தியாகம் செய்த வீரர்கள்
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அழகு முத்துக்கோனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘சுதந்திரத்துக்காக தியாகம் செய்து, தெரியப்படாத வீரர்களை நாம் அறிந்து, இளைஞர்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின் நோக்கம். எனவே, இதுபோன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை மாணவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்’’ என்றார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, நடிகர் எஸ்.வி.சேகர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், அமமுக மண்டல பொறுப்பாளர் கரிகாலன், தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே ஜே.ராமச்சந்திரன், யாதவ மகாசபை நிறுவனத் தலைவர் தி.தேவநாதன், தமிழ்நாடு யாதவர் பேரவை மாநிலத் தலைவர் ஜி.ஜி.கண்ணன், நிறுவனர் டாக்டர் ஆர்.காந்தையா, உயர்மட்ட குழுத் தலைவர் எஸ்.வேலுச்சாமி, பொதுச் செயலாளர் அரசு ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காவிய நாயகன் புகழ் வாழ்க
மாவீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘மாவீரன் அழகு முத்துக்கோன், உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம். 18-ம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக் கொடுத்து, வரலாற்றில் நீங்கா இடமும், மங்காப் புகழும் கொண்டவர். கட்டாலங்குளத்துக் காவிய நாயகன் புகழ் வாழ்க’’ என்று தெரிவித்துள்ளார்.