Published : 12 Jul 2022 07:15 AM
Last Updated : 12 Jul 2022 07:15 AM
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை ரத்து செய்யப்பட்டு, அதிகாரம் மிக்க பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்படுகிறது.
பொதுச் செயலாளர் தேர்வை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கும் வரை, இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி நியமிக்கப்படுகிறார் என்பது உட்பட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கேற்ப கட்சியின் சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடந்தது. இதில் 16 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது. முதல் 8 தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், அடுத்த 8 தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் வாசித்தனர்.
16 தீர்மானங்கள் விவரம்
# அதிமுக அமைப்புத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து.
#தந்தை பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.
# அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற அதிகாரம் மிக்க, தெளிவான, வலிமையான அரசியல் தலைமை இல்லாமல், இரட்டைத் தலைமைஏற்பட்ட பிறகு, முடிவுகள் எடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. வலிமையான ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம்.
எனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை ரத்து செய்யப்படுகிறது. மீண்டும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானிக்கப்படுகிறது.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு முறையான தகுதிகளை நிர்ணயிக்க சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட, 10 ஆண்டுகள் தொடர்ந்துஉறுப்பினராக இருக்க வேண்டும்.
தலைமைபொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். போட்டியிடுபவர் பெயரை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்து, 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். துணை பொதுச் செயலாளர்களை பொதுச் செயலாளர் நியமிப்பார்.
# பொதுச் செயலாளர் விடுவிக்கப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ, செயல்படாத நிலை ஏற்பட்டாலோ, புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்கும் வரை, பொதுக்குழுவால் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார். அதற்கேற்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது.
# தலைமை நிலையச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்முதல்வருமான பழனிசாமியை, கட்சியின்சட்டவிதிகள் படி, இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்து நியமிக்க, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கட்சியின் நிர்வாகத்தை நடத்தஅவருக்கு பொதுக்குழு ஒருமனதாக அங்கீகாரம் வழங்குகிறது.
4 மாதத்துக்குள் பொதுச் செயலாளர் தேர்தல்
# பொதுச் செயலாளர் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டியது கட்டாயம். ஜூலை11-ம் தேதி (நேற்று) வரை கட்சியின் உறுப்பினர்களாக பதிவேட்டில் உள்ளவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உரிமை உடையவர்கள். அவர்களுக்கு புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்படும்.
பொதுச் செயலாளர் தேர்வை 4 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்பதால், தேர்தல் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
# இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்று, எம்ஜிஆர், ஜெயலலிதாவழியில் தலைமையேற்று வழிநடத்த தொண்டர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
# ஜெயலலிதா ஆட்சியின் சரித்திர சாதனைகள், பழனிசாமி தலைமையிலான அரசின் வரலாற்று வெற்றிகளுக்கு பாராட்டு.
# அதிமுக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ரத்து செய்துள்ள திமுக அரசுக்கு கண்டனம்.
# விலைவாசி உயர்வை தடுக்க தவறி, மின்மிகைமாநிலமான தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றிய திமுக அரசுக்கு கண்டனம்.
# சட்டம் - ஒழுங்கை காக்க தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
# மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க மத்திய, மாநிலஅரசுகளுக்கு வலியுறுத்தல். நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தருமாறு திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
# இலங்கை தமிழர் நலன் காக்கவும், மறுவாழ்வை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
# பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு என திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்.
# நூல் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்.
# தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டுபழிவாங்கி வரும் திமுக அரசுக்கு கண்டனம்.
மேற்கண்ட 16 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. சட்டவிதிகள் 20, 20-அ மற்றும் 20-அ விதியில் 1 முதல் 13 பிரிவுகள், 20-ஆ, 20-இ, விதி 43, 45 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பழனிசாக்கு தலைவர்கள் வாழ்த்து
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழனிசாமிக்கு பாமகநிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT