

சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு தரப்பினர் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. அப்போது, கூட்டமாக சேர்ந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கட்சி அலுவலகத்தின் உரிமையை கோருவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு, பொது அமைதி பாதிக்கப்பட்டதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்சென்னை வருவாய் கோட்ட அலுவலரிடம் ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் அறிக்கை அளித்தார்.
அதன்பேரில், வருவாய்கோட்ட அலுவலர் (தெற்கு/ உட்கோட்ட நடுவர், தென் சென்னை) சம்பவ இடத்தைபார்வையிட்டு விசாரணை நடத்தினார். உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தீவிர சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டு, பொது அமைதி சீர்குலைந்துவிடும் என்று கருதியதால் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
கட்சி அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, வரும் 25-ம்தேதி இரு தரப்பினரும் தாமாகவோ, வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகுமாறு வருவாய் கோட்ட அலுவலர் நோட்டீஸ் வழங்கியுள்ளார். இரு தரப்பு தலைவர்களின் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.