Published : 12 Jul 2022 07:34 AM
Last Updated : 12 Jul 2022 07:34 AM
மதுரை: மதுரை ஆதீனத்துக்குச் சொந்த மான கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை ஆதீன மடத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், கஞ்சனூர், திருப்புறம்பியம் ஆகிய இடங்களில் 4 கோயில்கள் உள்ளன. விதிப்படி ஆதீனக் கோயில்களுக்குச் செயல் அலுவலரை நியமிக்க 3 நபர்களைத் தேர்வு செய்து ஆதீன மடத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிந்துரை செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரை செயல் அலுவலராக ஆதீனம் தேர்வு செய்வார்.
இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலுக்குச் செயல் அலுவலரை நியமித்து அறநிலையத் துறை இணை ஆணையர் 24.1.2022-ல் உத்தரவிட்டார்.
ஆதீனக் கோயில்களுக்குச் செயல் அலுவலரை அறநிலையத் துறை ஆணையர்தான் நியமிக்க வேண்டும். இதிலும் விதிமீறல் நடந்துள்ளது. செயல் அலுவலராக நியமிக்கப்படுபவர் ஆதீனத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டுப் பணிகளைதொடங்க வேண்டும்.
ஆனால்,செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகுமார், தற்போது வரை ஆதீனத்தைச் சந்திக்கவில்லை. கஞ்சனூர் அக்னீஸ்வரர்கோயிலுக்குச் செயல் அலுவலரை நியமித்து இணைஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். ஆதீன மடம் சார்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் வாதிட்டார். பின்னர் நீதிபதி, கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விதிப்படி 3 பேரை அறநிலையத்துறை ஆணையர் தேர்வு செய்து ஆதீனத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT