

சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதில்இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்காலிக ஆசிரியர்களாக இப்போது நியமிக்கப்படுபவர்கள், எதிர்காலத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், அப்போதும் இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படும் என்பதால் இது போக்க முடியாத சமூக அநீதியாக அமைந்து விடக்கூடும்.
ஆசிரியர்கள் நியமனத்திலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றால், அதனால் சமூகநீதிக்கு ஏற்படும் பின்னடைவை சரி செய்ய முடியாமல் போய்விடும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படக் கூடாது; காலமுறை ஊதிய அடிப்படையில்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு.
தற்காலிக ஆசிரியர் பணிக்குவிண்ணப்பத்திருப்பவர்களில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரித்து, மாநிலஅளவில் கலந்தாய்வு நடத்தி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.அவ்வாறு செய்வதன் மூலமாக மட்டும்தான் அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும், சமூக நீதியைப் பாதுகாக்கவும் முடியும் என்பதை பள்ளிக்கல்வித் துறை உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.