Published : 12 Jul 2022 06:29 AM
Last Updated : 12 Jul 2022 06:29 AM

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ரூ.15 கோடியில் கூடுதல் கட்டிடங்கள்: ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்

சென்னை: பவானிசாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 300 பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள பவானிசாகரில் கடந்த 1974-ம் ஆண்டு அரசு அலுவலர் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டது.

அரசுப் பணியில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறும் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் பணியில் சேர்ந்தவுடன், அவர்களுக்கு அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொதுமக்கள் தொடர்பு, கணக்கு பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது.

சுமார் 700 பேர் தங்கி அடிப்படை பயிற்சி பெறும் வகையில் இந்த பயிற்சி நிலையம் கட்டப்பட்டது.

தற்போது கூடுதலாக 300 பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில் ரூ.15 கோடியில் 4 நவீன வகுப்பறைகள், 2 தங்கும் விடுதிகள், உணவருந்தும் கூடம், பல்நோக்கு அரங்கம் ஆகிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.

இந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்களுக்கு சிறந்த கற்கும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் 4 நவீன வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 2 விடுதிகளில், மாற்றுத் திறனாளிகளும் இடையூறின்றி எளிதில் தங்கி பயிற்சி பெறும் வகையில் பிரத்யேகமாக தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்நோக்கு அரங்கில் ஒரே நேரத்தில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு யோகா, உடற்பயிற்சி, கருத்தரங்குகள், சிறப்பு வகுப்புகள் போன்றவை நடத்தமுடியும்.

இதன்மூலம், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பணியாளர்களுக்கு சிறந்த பயிற்சி வழங்கி, அவர்களை திறன்மிக்கவர்களாக, சேவை நோக்கம் கொண்டவர்களாக மாற்றி, அரசு நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x