தாம்பரம் | சைக்கிளில் பள்ளிக்குச் சென்ற பிளஸ் 1 மாணவன் லாரி மோதி உயிரிழப்பு: போலீஸாரின் அலட்சியமே காரணம் என மக்கள் மறியல்

லட்சுமிபதி
லட்சுமிபதி
Updated on
1 min read

தாம்பரம்: தாம்பரம் அருகே லாரி மோதியதில் பள்ளிச் சென்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நெரிசல் நேரத்தில் லாரிகளை அனுமதிப்பதும் போக்குவரத்து போலீஸார் பணியில் இல்லாததுமே இந்த உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு விஷ்ணு நகரைச் சேர்ந்த நாராயணமூர்த்தி, பொன்னி தம்பதியினர். கட்டிடத் தொழிலாளர்களான இவர்களின் மகன் லட்சுமிபதி (16). இவர் மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இவர் நேற்று காலை வழக்கம்போல பள்ளி செல்ல தனது சைக்கிளில் முடிச்சூர் சாலை மதுரவாயல் மேம்பாலம் சர்வீஸ் சாலை சந்திப்பு பகுதியில் வந்தபோது பின்னால் வந்த டாரஸ் லாரி திடீரென மோதியது. இதில் மாணவன் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து, சாலையில் வந்த மேலும் 4 டாரஸ் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் விபத்து நடப்பதற்கு போக்குவரத்து போலீஸாரின் அலட்சியமே காரணம் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த 1-ம் தேதி, இதேபோல் டாரஸ் லாரி மோதியதில் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த, சாமுவேல் (50) என்பவர் உயிரிழந்தார். தற்போது விபத்து நடந்த இதே இடத்தில், ஒருவர் விபத்தில் சிக்கி காலை இழந்தார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் காலை நேரங்களில் நேரங்களில் அதிக அளவில் லாரிகள் இச்சாலையில் அனுமதிப்பதே விபத்துக்கு காரணம்.

மேலும், நெரிசல்மிக்க இந்தச் சாலையில் போக்குவரத்து போலீஸார் பணி செய்வது இல்லை. இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை கோரி பொதுமக்கள் மறியலைத் தொடர்ந்தனர்.

தகவல் அறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவராமஜெயம் உள்ளிட்ட போலீஸார் வந்தனர். அவர்களிடம் கனரக வாகனங்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில், தடை விதிக்க வேண்டும் எனக் கூறினர்.

பிறகு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் லாரி ஓட்டுநர் கடப்பேரியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in