

சென்னை: ஜல்லிக்கட்டில் நாட்டு இன மாடு களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை ஒக்கியம் துரைப் பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஜல்லிக்கட்டு போட்டி களில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த மாடுகள் நாட்டு மாடுகள்தான் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும்.
பொய் சான்று அளித்தால் சம்பந்தப் பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயற்கை கருத்தரித்தல் முறையைத் தவிர்க்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், "செயற்கை கருவூட்டல் முறை குறித்த முக்கிய அம்சங்களை சென்னை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதற்கு எவ்வித முகாந்திரமும் கிடையாது. அதனால் ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதி வாய்ந்த நாட்டு இனமாடுகள் உட்பட அனைத்து வகையான மாடுகளையும் அனுமதிக்க வேண்டும். நாட்டு இன மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.