Published : 26 May 2016 04:13 PM
Last Updated : 26 May 2016 04:13 PM

சட்டப்பேரவையில் திமுக குரல் ஓங்கி ஒலிக்கும்: ஸ்டாலின்

தமிழக மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை மையமாக வைத்து திமுகவின் குரல் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலிக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, அதில் இரு பதவிகளுக்கு திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் இன்று நிருபர்களிடம் கூறும்போது, "தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைவதை ஒட்டி, அந்த பதவிகளுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கட்சியின் செய்தி தொடர்புச் செயலாளர் திரு. டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்" என்றார்.

திமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள நிலையில், உங்களது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு, "அவர் நேற்றைக்கு அப்படி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு வந்தபோதே நான் அதனை குறிப்பிட்டுள்ளேன்.

இதுவரை தமிழக வரலாற்றிலேயே இவ்வளவு பலம் வாய்ந்த எதிர்க்கட்சி அமைந்தது இல்லை. ஆகவே, இந்த சூழ்நிலையில் பெரும்பான்மை பலம் பெற்று எதிர்க்கட்சியாக உள்ள திமுக இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு என்னென்ன தேவைகள் உள்ளனவோ, முக்கியமான பிரச்சினைகள் என்னென்ன உள்ளனவோ அவற்றையெல்லாம் மையமாக வைத்து எங்கள் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும்" என்றார்.

திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் உரிய வசதி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே இருந்த நிலையில், தற்போதைய வசதிகள் எப்படி என்று கேட்டதற்கு, "நேற்று எந்த நிலையில் வந்து கையெழுத்திட்டு விட்டுச் சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே இந்த அரசு அதற்கு ஏற்றவகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம்" என்றார்.

மேலும், பதவியேற்பு விழாவில் இருக்கை சர்ச்சைக்கு முதல்வர் அளித்த விளக்கம் மற்றும் சட்டப்பேரவையில் பரஸ்பரம் வணக்கம் கூறிக்கொண்டது குறித்து கேட்டதற்கு, "உங்களுக்கும் கூட இப்போது வணக்கம் தெரிவிக்கின்றேன்" என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x