Published : 12 Jul 2022 04:30 AM
Last Updated : 12 Jul 2022 04:30 AM

சுங்கச்சாவடி நடைமுறையில் விரைவில் மாற்றம்: மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தகவல்

வேலூரில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அருகில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி. படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விகே சிங் கூறியதாவது: ‘‘தமிழகத்தில் சில சாலை திட்டங்களை கவனத்துடன் செயல்படுத்தி வருகிறோம். பெரும்பாலான பணிகள் தமிழக பொதுப்பணித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் புதிய விமான போக்குவரத்து முனையம் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

சென்னையின் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து தமிழக அரசு தெரிவித்தால் அது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்படும். சுங்கச்சாவடி நடைமுறையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டு சாலையில் எத்தனை கி.மீ தொலைவுக்கு பயணம் செய்கிறோம் என்பதற்கு ஏற்ப பணம் வசூலிக்கப்படும்.

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மீது அமைச்சரவை முடிவு செய்யும். அக்னிபாத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில், குறை கூறுவதை மட்டுமே எதிர்கட்சிகள் செய்கின்றன.

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்ட மதிப்பீடு வரப்பெற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 90 சதவீதம் நிலம் இருந்தால்தான் சாலை பணி தொடங்கும். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் திட்டத்தை தொடங்க முடியாது’’ என்றார். அப்போது, பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x