

மதுரை: தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் எதிரெதிர் அணியாக கோஷ்டி அரசியல் செய்து வந்த மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் இன்று (ஜூலை 11) நடந்த பொதுக்குழுவில் தங்கள் பூசலை மறந்து ஒரே அணியாக கே.பழனிசாமி பக்கம் நின்றுள்ளனர்.
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்கு நிகராக மாவட்டங்கள் தோறும் கோஷ்டி பூசல் உண்டு. ஆனால், அது காங்கிரஸ் கட்சியை போல் அடிதடி சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு வெளிப்படையாக தெரியாது. அதிமுக ராணுவ கட்டுப்போடுகளோடு இயங்கிய காலமாக கருதப்பட்ட ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோதும் கூட மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் துணை பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் இடையே மாவட்டங்கள் தோறும் உள்கட்சி பூசல் இருந்து வந்தது.
இதில், ஜெயலலிதா ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கு கட்சி மற்றும் ஆட்சியில் பதவியையும், அதிகாரத்தையும் வழங்கிய போது மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒதுங்கி நிற்பார்கள். ஆனால், அதிருப்தியாளர்கள் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுக்கு எதிராக ஜெயலலிதாவுக்கு புகார் மனு அனுப்புவது, கட்சியில் அவர்களுக்கு எதிராக உள்ளடி வேலைப்பார்ப்பதுமாக இருப்பார்கள். ஆனால், தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவுக்கு பயந்து தேர்தல் பணியில் வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பார்கள்.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் காலத்தில் அதிமுகவினர் காங்கிரஸ் கட்சியினரை போல வெளிப்படையாகவே கருத்து மோதலை தாண்டி மோதிக்கொண்டார்கள். மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மற்ற துணை அமைப்புகளில் இருந்தவர்கள் இடையே இருந்த கோஷ்டி பூசல் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால், ஜெயலலிதா போன்று அதிமுகவில் ஆளுமையாகவும், செல்வாக்காகவும் ஓபிஎஸ்-இபிஎஸ் இல்லாததால் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அதனால் இடைத்தேர்தல், கடந்த சட்டமன்ற தேர்தல், மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்தது.
மதுரை மாவட்டத்தில் மாநகர செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, மேற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வெளிப்படையாகவே கோஷ்டி அரசியல் செய்பவர்கள். இவர்களுடைய இந்த கோஷ்டி அரசியலால் அதிமுகவுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மூவரும் ஆரம்பம் முதலே தங்களுக்குள் கோஷ்டி பூசல் இருந்தாலும் மாநில அளவில் கே.பழனிசாமி அணியிலே இருந்தனர்.
இவர்கள், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை மாவட்ட அரசியலை விட்டு முழுமையாக ஓரங்கட்டினர். அதனாலே, மதுரை மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரியளவிற்கும் நிர்வாகிகள் ஆதரவு இல்லாமல் போனது. அதுபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதனும், திண்டுக்கல் சீனிவாசனும் பரம எதிரிகள் போல் கட்சியில் செயல்படுகிறவர்கள். அப்படியிருந்தும் தற்போது இருவரும் கே.பழனிசாமிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
அதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, தம்பித்துரை ஆகியோர் ஜெயலலிதா காலம் முதலே பேசிக்கொள்ளவே மாட்டார்கள். அந்தளவுக்கு அந்த மாவட்டத்தில் கோஷ்டி அரசியலில் இருவருக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் வட்டம் உண்டு. ஆனால், தற்போது இருவரும் பழனிசாமி பக்கம் சாய்ந்துள்ளனர். இதுபோல், கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியில் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்ட முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானவர்கள் கே.பழனிசாமி பக்கம் சென்றுள்ளனர். இவர்கள் வழியில் தொண்டர்களும் கே.பழனிசாமி பக்கம் செல்வார்களா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் கூறுவது போல் அவருடன் செல்வார்களா? என்பது போக போகதான் தெரிய வரும்.
இதுகுறித்து, அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது. மதுரை மாவட்டத்திலே ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் எம்பி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் மண்டலத் தலைவர் சாலைமுத்து உள்ளிட்டோர் இருந்தனர். ஆனால், இவர்களில் கோபாலகிருஷ்ணனை தவிர மற்றவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பெரியளவிற்கு உதவவில்லை. அதனால், விரக்தியில் முத்துராமலிங்கம் திமுகவிற்கு சென்றார். மாணிக்கம் பாஜகவிற்கு சென்றுவிட்டார். எஸ்.எஸ்.சரவணன், பழனிசாமி பக்கம் வந்துவிட்டார். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான சாலைமுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்தாலே கடந்த மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் ‘சீட்’ வாங்குவதற்குள்ளே நொந்து போய்விட்டார். உட்கட்சி பூசலினால் அவர் கவுன்சிலர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அதனால், தற்போது அரசியலில் இருந்தே ஒதுங்கி நிற்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது தன்னுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நின்ற நிர்வாகிகளுக்கு கட்சியில் பதவிகள் மற்றும் தேர்தலில் சீட் பெற்றுத்தர ஆர்வம் காட்டவில்லை.
மேலும், தேர்தலில் ‘சீட்’ பெற்றுக் கொடுத்தாலும் தேர்தல் செலவுகளுக்கும் பணம் கொடுக்கவில்லை. அதேநேரத்தில் கே.பழனிசாமி கட்சி மற்றும் தேர்தல் செலவுகளுக்கு பணத்தை வாரி இறைத்தார். தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவிகளை பெற்றுக் கொடுக்க கே.பழனிசாமி உதவிபுரிந்தார். அவர்களுக்காக கட்சியில் குரல் கொடுத்தார். அதனாலே, இன்று அவரது பின்னால் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு இடையேயான கோஷ்டி பூசலை மறந்து கே.பழனிசாமி பக்கம் நிற்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.