உரிகம் வனச்சரக காவிரி ஆற்றங்கரையில் சிறப்பு வனக்குழு கண்காணிப்பு பணி தீவிரம்

உரிகம் வனச்சரக காவிரி ஆற்றங்கரையில் சிறப்பு வனக்குழு கண்காணிப்பு பணி தீவிரம்

Published on

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டம் உரிகம் வனச்சரகம் காப்புக்காட்டை ஒட்டிச் செல்லும் காவிரி ஆற்றில் இன்று முதல் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வருவதை தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக நாடி வரும் வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையின் சிறப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, ராயக்கோட்டை, உரிகம் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இதில் தமிழக எல்லையில் உள்ள உரிகம் வனச்சரகத்தில் தக்கட்டி, கெஸ்த்தூர், பிலிகல், மல்லஹள்ளி, மஞ்சுகொண்டப்பள்ளி, உரிகம் ஆகிய 6 காப்புக்காடுகள் உள்ளன.

இதில் பிலிகல், மல்லஹள்ளி மற்றும் கெஸ்த்தூர் ஆகிய 3 காப்புக்காடுகளை ஒட்டிவாறு காவரி ஆறு செல்கிறது. கடந்த சில நாட்களாக காவிரியாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிகனமழை பெய்து வருவதால் உரிகம் வனச்சரகத்தை ஒட்டிச் செல்லும் காவிரியாற்றில் இன்று முதல் 50 ஆயிரம் கனஅடி வரை மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதில் பிலிக்கல், கெஸ்த்தூர் ஆகிய காப்புக்காட்டை ஒட்டியபடி செல்லும் காவிரி ஆற்றில் தாகம் தணிக்க வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது மழைக்காலங்களில் வழக்கமான நிகழ்வாக உள்ளது. இந்த வனவிலங்குகளை வெளியாட்களிடமிருந்து பாதுகாத்து மீண்டும் காப்புக்காட்டுக்குள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிக்காக வனத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயானி உத்தரவின் பேரில் காவிரி ஆற்றில் தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகளின் கண்காணிப்பு பணிக்காக 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் வனவர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர் உள்ளிட்ட 6 பேர் முதல் 10 பேர் வரை பணியில் உள்ளனர். காவிரி ஆற்றில் இன்று(நேற்று) காலையில் 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து பிற்பகலில் 50 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

காப்புக்காட்டை ஒட்டிச் செல்லும் காவிரியாற்றில் தண்ணீர் குடிக்க வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக காவிரி ஆற்றை நாடி வரத்தொடங்கி உள்ளன. இந்த வனவிலங்குகளை வெளி ஆட்கள் வேட்டையாடுவதை தடுத்து பாதுகாக்கும் வகையிலும், வெளியாட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையிலும் கெஸ்த்தூர், மல்லஹள்ளி, கோட்டையூர் மற்றும் பிலிகல் காப்புக்காட்டை ஒட்டிச் செல்லும் காவிரி ஆற்றங்கரை பகுதியில் சிறப்பு குழுவினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in