

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 8010 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 3149 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 8010 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று காலை 12 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்ட நீரின் அளவு மாலை மேலும் அதிகரித்து 15 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும், நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் நேற்று 98.29 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 98 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 62.27 டிஎம்சி-யாக உள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணை நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.