மதுரை ஆதீனம் கோயில் செயல் அலுவலர் நியமனத்துக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஆதீனம் கோயில் செயல் அலுவலர் நியமனத்துக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுவாமி கோயில் செயல் அலுவலர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: "மதுரை ஆதீன மடத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், கஞ்சனூர், திருப்புறம்பியம் ஆகிய இடங்களில் நான்கு கோயில்கள் உள்ளன. விதிப்படி ஆதீன கோயில்களுக்கு செயல் அலுவலரை நியமிக்க மூன்று நபர்களை தேர்வு செய்து ஆதீன மடத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிந்துரை செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரை செயல் அலுவலராக ஆதினம் தேர்வு செய்வார்.

இந்த நடைமுறையை பின்பற்றாமல் கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு செயல் அலுவலரை நியமித்து அறநிலையத் துறை இணை ஆணையர் 24.1.2022-ல் உத்தரவிட்டுள்ளார். ஆதீன கோயில்களுக்கு செயல் அலுவலரை நியமிக்க அறநிலையத் துறை ஆணையர்தான் நியமிக்க வேண்டும். இதிலும் விதிமீறல் நடைபெற்றுள்ளது.

செயல் அலுவலராக நியமிக்கப்படுபவர் ஆதீனத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு பணிகளை தொடங்க வேண்டும். ஆனால், கஞ்சனூர் கோயில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமார், தற்போது வரை ஆதீனத்தை சந்திக்கவில்லை. கோயில் தொடர்பான பதிவேடுகள், நகை தொடர்பான விபரங்களையும் ஆதீனத்திடம் ஒப்படைக்கவில்லை.

எனவே, கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு செயல் அலுவலரை நியமித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஆதீன கோயில்களுக்கு செயல் அலுவலர்களை நியமிக்கும் போது விதிகளை பின்பற்றவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதீனம் மடம் சார்பில் வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி, கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், விதிப்படி மூன்று பேரை அறநிலையத் துறை ஆணையர் தேர்வு செய்து ஆதீனத்திற்கு பரிந்துரை செய்யலாம் என உத்தரவிட்டதுடன், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in