

சென்னை: “நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பதை மாற்றியதற்கு அதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுப்பார்கள்” என்று சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு மற்றும் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செய்தியாளர்களுக்கு சசிகலா அளித்த பேட்டியில், "அதிமுக தொண்டர்கள் நினைப்பவர்கள்தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆக முடியும். இதுதான் சட்டம். இதன்படிதான் அதிமுக இயங்கும்.
அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் என்னையே ஆதரிக்கின்றனர். இன்று ஒரு கருத்து, நாளை ஒரு கருத்தை நான் பேச மாட்டேன். எல்லாரையும் ஒன்று சேர்த்து ஒரு அதிமுகவாக இணைந்து வெற்றி பெறுவோம். ஆட்சி அமைப்போம்.
தொண்டர்கள் இருக்கும் இடத்தில்தான் தலைவர்கள் உருவாக வேண்டும். பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, இந்த நியமனம் தவறானது.
நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பதை மாற்றியதற்கு தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்ததை தொண்டர்களும் விரும்பவில்லை. பொதுமக்களும் ரசிக்க மாட்டார்கள். தொண்டர்கள் முடிவுதான் இறுதியானது. அதுதான் வெற்றி பெறும்" என்று அவர் கூறினார்.