நாமக்கல் எம்.பி சின்ராஜ் தரையில் அமர்ந்து தர்ணா: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

நாமக்கல் எம்.பி சின்ராஜ் தரையில் அமர்ந்து தர்ணா: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் எம்.பி சின்ராஜ் தரையில் அமர்ந்து தர்ணா செய்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் லத்துவாடி ஊராட்சி தலைவர் மீது புகார்கள் வந்தது. அதன்பேரில், லத்துவாடி ஊராட்சி அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கடந்த வாரம், நாமக்கல் எம்.பி.ஏ. கே. பி. சின்ராஜ், லத்துவாடிக்கு சென்றார். அப்போது ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து ஆவணங்களை தனது அலுவலகத்தில் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

அங்கிருந்த ஊராட்சி செயலாளரிடம் எம்.பி சின்ராஜ் இது குறித்து கேட்டபோது, தன்னிடம் ஊராட்சி சம்பந்தமான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய எம்.பி.சின்ராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்கை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ''லத்துவாடி ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார். இதுவரை ஊராட்சி தலைவர் மீது ஆட்சியர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இச்சூழலில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சின்ராஜ் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் பணி செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். நாமக்கல் பகுதியில், மக்கள் பிரச்சினை நிறைய உள்ளது. அது குறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேச முடியவில்லை, அதனால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பியிடம் மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரேயா சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கொ.ம.தே.க. எம்,பியான சின்ராஜ் கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in