

சென்னை மாநகராட்சியில் புளியந்தோப்பு- காந்திநகர் பகுதியில் கழிவுநீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்படாததால், அங்குள்ள 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தனி கழிப் பறைகள் கட்ட முடியவில்லை. அதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
பேசின் பாலம் அருகில் கடந்த 1977-ல் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த குடிசைகள் எரிந்தன. பின்னர் குடிசைகளை 301 குடும்பங் களுக்கு, புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியில், குடிசை மாற்று வாரியம் சார்பில் ஓட்டு வீடுகள் வழங்கப்பட்டன. தற்போது அப்பகுதியில் 400-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
சென்னை மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அப்பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் இது வரை கழிவுநீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. அதனால் அவர்களின் வீடு களில் தனி கழிப்பறைகளை கட்டமுடியவில்லை. இதன் விளைவாக அவர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை களை கழித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி யில் வசித்து வரும் வழக்கறிஞர் பி.வேல்மணி கூறும்போது, “இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பொது கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பயன்பாட்டில் இல்லை. இங்கு கழிவுநீர் கட்டமைப்பை ஏற்படுத்துமாறு மாநகராட்சி, குடிநீர் வாரியத்திடம் முறை யிட்டும் தீர்வு கிடைக்க வில்லை.
தற்போது 3 கழிப்பறைகளை அங்கு கட்டியுள்ளனர். அவற்றை 400 குடும்பங்கள் எப்படி பயன்படுத்த முடியும் என்று மாநகராட்சி நிர்வாகம் சிந்திக்கவில்லை. அதனால் அங்கு திறந்தவெளியில் மலம் கழிப்பது தொடர்கதையாக உள்ளது. இதனால் மக்கள் பல் வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்” என்றார்.
அவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை குடிநீர் வாரியத்திடம் கேட்டபோது, “காந்திநகரில் உள்ள தெருக்கள் மிகவும் குறுகலான சந்துகளாக இருப் பதால் அங்கு கழிவுநீர் கட்ட மைப்பு வசதி செய்துதர இயலவில்லை” என பதில் அளித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் கேட்டபோது, “காந்தி நகர் பகுதியில் இருந்து கழிவு நீர் எளிதாக வழிந்து ஓடுவதற்கு ஏதுவாக மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது” என்று பதில் அளித்துள்ளனர்.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகமே, கழிவுநீர் வெளி யேற மழைநீர் கால்வாய் கட்டப் பட்டுள்ளது என்று அதன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.