

அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என திமுக தொடர்ந்த வழக்கில், இதுதொடர்பாக பெறப்படும் கோரிக்கை மனுக்களை மே 27-க்குள் பரிசீலித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த அவசர மனுவில், ‘‘அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல் ஜூன் 13-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. எனவே இந்த 2 தொகுதிகளிலும் தேர்தலை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியி ருந்தார்.
இந்த மனு மீதான சிறப்பு விசாரணை நேற்று நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், ‘‘அரவக்குறிச்சி தொகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம். ஜூன் 6-ம் தேதி ரம்ஜான் தொடங்கு வதால் நோன்பு இருக்கும் முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஓட்டு போட முன்வரமாட்டார்கள். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் ஜூன் 11-ல் நடக்க உள்ளது. ஜூன் 13 அன்று இந்த 2 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தால், இந்த 2 எம்எல்ஏக்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பறிபோகும். எனவே தேர்தலை ஜூன் 6-க்கு முன்பாக நடத்த உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.
தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தனது வாதத்தில், ‘ஜூன் 13 அன்று தேர்தல் நடத்த ரம்ஜான் நோன்பு ஒரு தடையாக இருக்கும் என்றால், ரம்ஜான் முடிந்த பிறகு ஜூலையில்கூட தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. தேர்தலை எப்போது நடத்த வேண்டும், எப்படி நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் முழு உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது’’ என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘தேர்தல் ஆணையத்தின் அதி காரத்தில் யாருமே தலையிட முடியாது எனக் கூறுவதை ஏற்க முடியாது. ரம்ஜான் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை காரணம் காட்டி தேர்லை முன்கூட்டியே வைக்க வேண்டும் என மனுதாரர் கோருகிறார். எனவே, இது தொடர்பாக அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் கருத்துகளை தேர்தல் ஆணையம் கோர வேண்டியது அவசியம்.
மேலும் இஸ்லாமியர்களின் புனித நோன்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் எம்எல்ஏக்களுக்கு உள்ள வாக்களிக்கும் உரிமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த 2 தொகுதிகளிலும் தேர்தலை முன்கூட்டியே நடத் துவது தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி வேட் பாளர்களும் தங்களது புதிய கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையத்துக்கு மனுவாக அளிக்க வேண்டும். அந்த மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து மே 27-்க்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.