

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளைப்போல, அனைத்து போலீஸாரின் பணித்திறன் விவரங்களையும் கணினிமயமாக்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழக காவல் துறையில் 2-ம் நிலைக் காவலர்கள் முதல் டிஜிபி-க்கள் வரை மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 942 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 23 ஆயிரத்து 542 பேர் பெண் காவலர்கள்.
தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் செய்யும் பணித் திறன் குறித்து அளவிடப்படுகிறது. அதேபோல, காவல் துறையில் போலீஸாரின் செயல்பாடுகள், திறன், நடத்தை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆண்டுதோறும் அளவிடப்படுகிறது.
வருடாந்திர ரகசிய அறிக்கை என்றுஅழைக்கப்படும் இந்த பணித்திறன் அறிக்கையில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் விருது, பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பணித்திறன் அறிக்கை ஏற்கெனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தேவைப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்த பணித்திறனை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், பிற போலீஸாருக்கு இந்த வசதி இல்லை.
எனவே, அனைத்துப் போலீஸாரின் பணித்திறன் விவரங்களையும் கணினிமயமாக்க காவல் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, டிஜிபி சைலேந்திரபாபு மேற்பார்வையில், நிர்வாகப் பிரிவுகூடுதல் டிஜிபி சங்கர் தலைமையில், அனைத்து போலீஸாரின் பணித் திறனையும் கணினிமயமாக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அனைத்து போலீஸாரின் முழுத் திறனையும் வெளிக்கொணர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.பல போலீஸார் சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர். ஆனால், சிலர் மீது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எனவே, சிறப்பாகப் பணிபுரியும் போலீஸாருக்கு உரியஅங்கீகாரம் வழங்கும் வகையிலும், எந்தவித குளறுபடியும் நடைபெறாமல் இருக்கவும், அனைத்து போலீஸாரின் பணித்திறனும் கணினிமயமாக்கப்படுகிறது.
தனி வாகன வசதி
இதேபோல, குற்றம், பிரச்சினை நடைபெற்றால், சம்பவ இடத்துக்கு உடனடியாகச் செல்லும் வகையில், அனைத்து காவல் நிலையங்களுக்கும் தனி வாகனம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 1,305 காவல் நிலையங்களுக்குவாகனங்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.