Published : 11 Jul 2022 07:10 AM
Last Updated : 11 Jul 2022 07:10 AM
சென்னை: எச்சிஎல் நிறுவனம் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு ‘டெக் பீ’ (Tech bee) வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு, 2020-21, 2021-22-ம் கல்வியாண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளில் கணிதம் அல்லது வணிகக் கணிதம் பாடத்தை படித்திருப்பது அவசியம். டெக்பீ பயிற்சிக்கு திறனறித் தேர்வு, கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த திட்டம் குறித்து மாணவர்களிடம் விளக்குவதற்காக, கருத்தரங்கம் நடத்தவும் எச்சிஎல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஓராண்டு நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் 2,000 மாணவர்களுக்கு பயிற்சி, வேலைவாய்ப்பு வழங்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், டெக்பீ பயிற்சித் திட்டத்தில் சேர ஆர்வமுள்ள மாணவர்களைக்கண்டறிந்து, பரிந்துரைக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 88079 40948, 98655 35909, 94441 51303, 98941 52160 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT