Published : 11 Jul 2022 07:15 AM
Last Updated : 11 Jul 2022 07:15 AM

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தஞ்சாவூர் முனிசிபல் காலனி மாநகராட்சிப் பள்ளியில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி., துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ, மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்டோர். படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 5 சதவீதம் பேர்தான் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, தமிழகத்தில் தற்போது ஊரடங்கு என்பதற்கு இடமே இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் முனிசிபல் காலனிமாநகராட்சிப் பள்ளியில் நேற்றுநடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் தற்போது 21,513 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருந்தாலும், உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவில் இல்லை.

தமிழகத்தில் இதுவரை 11,44,23,194 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,458 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. 12-14, 15-17 வயதுக்குரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தஞ்சாவூர் மாநகராட்சி 100 சதவீதம் நிறைவு செய்து சாதனைப் படைத்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மருத்துவமனைகளில் 40 சதவீதத்துக்கு மேல் படுக்கைகள் நிரம்பினால்தான் ஊரடங்கு குறித்து பரிசீலனை செய்யப்படும். ஆனால், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 5 சதவீதம் பேர்தான் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

எனவே, தற்போது ஊரடங்கு என்பதற்கு இடமே இல்லை. தமிழகத்தில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதிலும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

உலக சுகாதார நிறுவனம் உலகம்முழுவதும் 110 நாடுகளுக்கு மேலாக, பி4, பி5 என்ற ஒமைக்கிரான் வைரஸ் பரவி வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 15-க்கும் அதிகமான மாநிலங்களில் இந்த பாதிப்பு உள்ளது. ஆனால், அதிக அளவில் உயிரிழப்புகள் இல்லை. காரைக்கால் பகுதியில் காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

6 மாதங்களில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதல்வர் தொடர்ந்து மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றதன் விளைவாக மதுரை ‘எய்ம்ஸ்’-க்கான 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடக்கின்றன. மதுரை ‘எய்ம்ஸ்’-க்கான கட்டமைப்பு வரைபடம் வெளியிடப்பட இருக்கிறது. 2 மாதங்களில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். 5 அல்லது 6 மாதங்களில் கட்டுமானப்பணிகள் தொடங்கிவிடும்.

4,308 பணியிடங்கள்

அரசு மருத்துவமனைகளில் உள்ள 4,308 காலிப் பணியிடங்களை நிரப்ப பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் (எம்ஆர்பி), சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள்1,021 மருத்துவர்கள் உட்பட 4308 பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x