

வெற்றி பெறுவோம் என்ற ஆரூடத்தை நம்பி தொண்டர் இருந்துவிடக்கூடாது என்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று வாகன பிரச்சாரம் செய்தார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து ஐஸ் அவுஸ் பகுதியில் அவர் பேசியதாவது:
திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற உங்களது ஆதரவை வழங்க வேண்டும். இப்போது நாடு எப்படி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். நாடு காடாக மாறியிருக்கிறது. பத்திரிகைகளில் பார்த்தால் தமிழக முதல்வர் ஏராளமான நன்கொடைகள், இலவசங்கள் வழங்கியிருக்கிறார் என்று செய்திகள் வந்துள்ளன. அந்த செய்திகளை எல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம். நாம் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதை சிந்தித்து ஆன்றோரிடம் விவாதித்து எந்தெந்த வகையில் தேர்தல் போராட்டத்தை நடத்தலாம் என்று சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். திமுகவுக்கு அளிக்கும் வாக்கு, நாட்டை உயர்த்தக்கூடியது. நம் மொழியை உயர்த்தக்கூடியது என்பதை எண்ணிப்பார்த்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நாம் வெற்றி பெறுவோம் என அரசியல் ஆரூடம் சொல்கிறார்கள். அதை நம்பி இருந்துவிடக் கூடாது. நாம் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதை மனதில் வைத்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
பின்னர் அவர் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் கு.க.செல்வத்தை ஆதரித்து தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகமே குலுங்குகின்ற அளவுக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி உரையாற்றினார். அவர் பேசும்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மக்களை மதிக்காத அதிமுக அரசை தூங்கி எறியுங்கள் என்று ஆவேசமாக வேண்டுகோள் விடுத்தார். அது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அவரது வேண்டுகோள் நிறைவேற தமிழக மக்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டை காப்பாற்ற உங்களின் அன்பான ஆதரவை தர வேண்டும். அந்த ஆதரவைத் தரும் வகையிலே உதய சூரியனுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உதய சூரியனுக்கு வாக்களித்தால் தமிழ்நாடு புதிய உதயத்தை காணும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
பின்னர் அவர் அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன், அம்பத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெ.எம்.எச்.அசன் ஆரூண், மதுரவாயல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராஜேஷ், ஆவடி திமுக வேட் பாளர் சா.மு.நாசர், பூந்தமல்லி திமுக வேட்பாளர் ஐ.பரந்தாமன் ஆகியோரை ஆதரித்துப் பேசினார். கருணாநிதி பிரச்சாரம் சென்ற இடங்களில் எல்லாம் சாலையில் வழிநெடுகிலும் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரும் பொதுமக்களும் திரளாக வருகை தந்து வரவேற்பு அளித்தனர்.