

கடலூர்: பாஜகவினர் வாய் சொல் வீரர்கள்.அவர்களால் எதையும் ஆக்கபூர்வமாக செய்ய முடியாது. எதிர்மறை விமர்சனங்களை செய்வார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியிருக்கிறார்.
காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளின் பதவிகளுக்கு தமிழகம் முழுவதும் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கீரப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பலத்தைப் பார்த்து அஞ்சி, பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற்போக்கு சக்திகள், எங்களுக்கு எதிராக செயல்பட்டு எங்களை பலவீனப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெறுகிறது. அதற்கு நாங்கள் துணையாக இருக்கிறோம். ஓராண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
பாஜகவினர் வாய் சொல் வீரர்கள். அவர்களால் எதையும் ஆக்கபூர்வமாக செய்ய முடியாது. எதிர்மறை விமர்சனங்களை செய்வார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 7 ஆண்டுகள் ஆகின்றன. செயல்படுகிற அரசை செயல்படவிடாமல் செய்வதும், செயல்படாத அரசை தூக்கிபிடிப்பதும்தான் பாஜகவின் கொள்கையாக இருக்கிறது.
‘வந்தே மாதரம் ரயில் திட்டத்தில் தமிழகத்துக்கு ஒரு ரயில்கூட இல்லை. இதற்காக அண்ணாமலை போராட வேண்டும். இதற்கான தன்னுடைய நடைபயணத்தை கோபாலபுரத்தில் இருந்து தொடங்கி, டெல்லிக்குச் சென்று மோடி வீட்டின் முன்பாக போராட வேண்டும். இவ்வாறு கூறினார்.